மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
ஹைலைட்ஸ்
- மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது
- மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது
- பாஜகவின் திட்டம் மகாராஷ்டிராவில் பலிக்காது என்கிறார் சஞ்சய் ராவத்
Mumbai: மத்தியப் பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவைத் தாக்காது என்று சிந்தியா விவகாரத்தில் சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைப் போன்று மகாராஷ்டிராவில் ஏதும் நடக்காது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவு அளித்து வந்த 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சட்டமன்றத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும், கமல்நாத் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச அரசியல் சூழல் குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
மத்தியப் பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவுக்குள் நுழையாது. மகாராஷ்டிராவின் சக்தி வித்தியாசமானது. 100 நாட்களுக்கு முன்பு இங்கு நடக்கவிருந்த அரசியல் ஆப்பரேஷன் தோல்வியில் முடிந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளின் கூட்டணி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து மகாராஷ்டிராவை காப்பாற்றியது.
இவ்வாறு சஞ்சய் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். பாஜகவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம்தேதி ஆட்சியைப் பிடித்தது.
இதற்கு முன்பாக நவம்பர் 23-ம்தேதி பாஜகவுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் திடீர் கூட்டணி அமைத்து துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். முதல்வராகத் தேவேந்திர பட்னாவீஸ் பொறுப்பு ஏற்றார். பெரும்பான்மையை இந்த கூட்டணி நிரூபிக்க முடியாததால் அரசு தோல்வியடைந்தது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்தில், சிவசேனா கூட்டணி அரசுக்கு 165 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கின்றனர்.