தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை சந்தித்த சிவசேனாவின் சஞ்சய் ராவத்
Mumbai: பாஜக - சிவசேனா இடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், சிவசேனாவின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், தீபாவளி பண்டிகையை ஒட்டிய மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே இன்று மாலையில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்யா தாக்கரே, மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆளுநரை சந்தித்ததாக ஆதித்யா கூறினார்.
மேலும், அவர் கூறும்போது, ஆட்சி அமைப்பது குறித்து தான் எதுவும் பேசவில்லை. அது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை உத்தவ் தாக்கரே கூறுவார். அவரின் வார்த்தையே இறுதியானது என்று அவர் கூறினார்.
முன்னதாக, சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக கூட்டணி கட்சியான காங்கிரஸூடன் அமர்வோம் என தேசியவாத காங்கிரஸ் காட்சி ஏற்கனவே தெளிவாக தெரிவித்துவிட்டது. எனினும், சிவசேனா கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது, பாஜகவுடன் மட்டுமே கூட்டணி வைத்து ஆட்சி அமைப்போம் என சிவசேனா உறுதியாக கூறியதாக தெரிகிறது.
50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவ சேனை முதல்வர், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் 2.5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும். சிவசேனா சார்பிலும் முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கூறிவருகிறது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப் பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்த திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. இந்த இரு கட்சிகளும் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை.