3 கட்சிகளை சேர்ந்த எம்.எம்.ஏக்களின் கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
Mumbai: டெல்லியில் அடுத்தடுத்து நடந்து வந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி இந்த வார இறுதியில் ஆட்சி அமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, 3 கட்சிகளை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களிடம் இருந்து பெறப்படும் கடிதங்கள் ஆளுநரிடம் வரும் சனிக்கிழமையன்று ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையொட்டி, கூட்டணியை இறுதி செய்யும் வகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
'அனைத்தும் சரியாக சென்றால்', ஞாயிறு அல்லது திங்கட்கிழமையில் பதிவியேற்பு விழா நடைபெறும் என்ற தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று காலை, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மகாராஷ்டிரா குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று அழுத்தமாக கூறியுள்ளார்.
சோனியா காந்திக்கு, முதலில் இருந்தே கொள்கை ரீதியாக வேறுபாடுடைய சிவசேனாவுடன் சேர்வதில் தயக்கங்கள் இருந்துள்ளன. ஆனால், அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் முக்கிய புள்ளிகள், பாஜகதான் நம் முதல் எதிரி. அதை வீழ்த்த இந்தக் கூட்டணியில் தவறில்லை, என்று அறிவுரை கொடுத்துள்ளார்களாம். அதைத் தொடர்ந்துதான் கூட்டணியை இறுதி செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார் சோனியா என்கின்றனர்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தினால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது.
இதில், பெரும்பான்மை கொண்ட கட்சியான பாஜகவை முதலில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எனினும், அழைப்பை ஏற்க பாஜக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, முதல்வர் பதவியையும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.
பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது.
எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. மேலும், அதிக இடங்களை கைப்பற்றிய தங்கள் கட்சி எதற்காக சரிபாதியாக அதிகாரத்தை பகிர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மறுப்பு தெரிவித்து வந்தது.
இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.