சுவாமியின் இறப்பு செய்தி அறிந்தவுடன், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மடத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
Bengaluru: கர்நாடகாவில் இருக்கம் ஸ்ரீ சித்தாகங்கா மடத்தின் தலைவர் சிவக்குமாரா சுவாமி, 111-வது வயதில் இயற்கை எய்தினார். கடந்த 2 வாரங்களாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.
கடந்த சில மாதங்களாக சிவக்குமாரா சுவாமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவருக்குச் சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களாக அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், வயது மூப்பின் காரணமாக இன்று அவர் உயிரிழந்தார்.
அவரின் இறப்பை அடுத்து, அனைத்துக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறிப்பாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா போன்றவர்கள் ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தினர். கர்நாடகாவில் சிவக்குமாரா சுவாமி, ‘கடவுள்' என்றே அழைக்கப்பட்டு வந்தார்.
சுவாமியின் இறப்பு செய்தி அறிந்தவுடன், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மடத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
லிங்காயத் - வீரசைவ முறை நம்பிக்கையைக் கடைபிடித்து வந்த சிவக்குமாரா சுவாமி, அனைத்துத் தரப்பினராலும் அதிகம் நேசிக்கப்பட்டவர் ஆவார்.
சுவாமிக்கு, பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இன்று அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் குமாரசாமி மற்றும் எடியூரப்பா, சுவாமிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா' கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஸ்ரீ சித்தாகங்கா கல்வி அறக்கட்டளையை சிவக்குமாரா சுவாமி உருவாக்கி பல்லாயிரம் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வழி செய்தார். இலக்கியத்தில் அவர், கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எல்லா மதம் மற்றும் சாதியினரையும் தன் அன்பால் தொட்டவர் சிவக்குமாரா சுவாமி.