This Article is From Jan 05, 2019

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமர் - சிவசேனா பாராட்டு

நரசிம்ம ராவுக்கு பின்னர் நாடு வெற்றிகரமான பிரதமரை பெற்றிருக்கிறது என்றால் அவர் மன்மோகன் சிங்தான் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமர் - சிவசேனா பாராட்டு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது

Mumbai:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், அவர் வெற்றிகரமான பிரதமர் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது. 

நரசிம்மராவுக்கு பின்னர் நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்றிருக்கிறது என்றால் அவர் மன்மோகன் சிங்தான் என்று கூறி, மோடியையும் அக்கட்சி சீண்டிப்பார்த்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா கட்சி இடம் பெற்றுள்ளது. இருப்பினும் பாபர் மசூதி விவகாரத்தில் பாஜகவுக்கு சிவசேனா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

''விபத்தால் பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்'' என பொருள்படும் 'The Accidental Prime Minister' என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாஜக ஆதரவாளர் என்று கூறப்படும் அனுபம் கேர் மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் வெளியிடுவதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் படத்தை வரும் 11-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், மன்மோகன் சிங் விபத்தால் வந்த பிரதமர் அல்ல என்றும் அவர் வெற்றிகரமான பிரதமர் எனவும் சிவசேனா கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில், ''நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளார். அவரை மக்கள் மதிக்கின்றனர். எனவே, அவர் விபத்து நேர்ந்ததால் திடீரென பொறுப்புக்கு வந்தது பிரதமர் அல்ல என்று நான் கருதுகிறேன். நரசிம்ம ராவுக்கு பின்னர் நாடு ஒரு வெற்றிகரமான பிரதமரை பெற்றிருக்கிறது என்றால் அவர் மன்மோகன் சிங்தான்'' என்று கூறியுள்ளார்.

.