"தலைவர் கலைஞர் உடல்நலிவுற்று இருக்கும் அதிர்ச்சி தாங்காமல் 21 கழக உடன்பிறப்புகள் உயிரிழந்திருப்பது என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இன்னுயிரை இழக்கும் இதுபோன்ற செயல்களின் ஈடுபட வேண்டாமென்று வேண்டுகிறேன்." என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் இறந்தவர்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும்,
"காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே, கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காமல், அமைதி காக்க வேண்டுகிறேன்" என்றும் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"எழுந்து வா, தலைவா! என்ற தொண்டர்களின் உணர்ச்சிமிக்க முழக்கங்கள் வீண்போகவில்லை. தலைவர் நலம்பெற்று வருகிறார். தொண்டர்கள் யாரும் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் செயல்களில் ஈடுபடவேண்டாம். அத்தகைய இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது. அண்ணா நமக்குக் கற்பித்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடித்து தலைவருக்குப் பெருமை சேர்க்கவேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று காலை நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 28ம் தேதி இரத்த அழுத்தம் குறைந்ததைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.