இந்தியா வந்த பெண்ணின் சடலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Thiruvananthapuram: சவூதியில் மாரடைப்பால் உயிரிழந்த ஆணின் சடலத்திற்கு பதிலாக பெண்ணின் சடலம் இந்தியா வந்துள்ளது. இதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் கொன்னி என்ற பகுதி உள்ளது. இதனைச் சேர்ந்த ரபிக் என்பவர் சபூதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
28 வயதான அவருக்கு கடந்த மாதம் 28-ம்தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
இந்த நிலையில் அவரது சடலம் நேற்றிரவு இந்தியா கொண்டு வரப்பட்டு பின்னர், சொந்த ஊரான கொன்னிக்கு கொண்டு செல்லப்பட்டது. சவப்பெட்டியை திறந்து பார்த்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் ரபிக் சடலத்திற்கு பதிலாக பெண்ணின் சடலம் இருந்தது. இந்த பெண்ணின் சடலம் எப்படி இந்தியா வந்தது என்பது தெரியவில்லை. இதேபோன்று ரபிக்கின் சடலம் எங்கு இருக்கிறது என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தியா வந்துள்ள பெண்ணின் சடலம் இலங்கையை சேர்ந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
ரபிக்கின் உடல் ஒருவேளை இலங்கைக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.