உடல் உறுப்புகளை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹைலைட்ஸ்
- பெருங்குடி குப்பைக் கிடங்கில் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன
- தூத்துக்குடியைச் சேர்நவந்தவர் இறந்த சந்தியா
- அவரது கணவர் பாலகிருஷ்ணன்
சென்னையில் உள்ள பெருங்குடி பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இந்தக் குப்பைக் கிடங்கிற்கு சில நாட்களுக்கு முன்னர், குப்பைகள் லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது கொட்டப்பட்ட குப்பையில், கை மற்றும் கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் இருந்தன. இதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில், குப்பையில் இருந்தது ஒரு பெண்ணின் கை மற்றும் கால்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடல் உறுப்புகளை காவல் துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்படிப் பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி, கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியது யார் என்பதை கண்டுபிடிக்க காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டது.
போலீஸின் தீவிர விசாரணையில், உடல் உறுப்புகள் எந்தப் பெண்ணுடையது என்பது தெரியவந்தது. உடல் உறுப்புகளுக்குச் சொந்தமான பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பவருடையது என்றும், அவர் சென்னை ஜாஃபார்கான் பேட்டையில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து, பெண்ணின் கணவர் பாலகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் போலீஸார், பாலகிருஷ்ணன் மீது சந்தேகப்பட்டு, அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் தற்போது, குற்றத்தை ஒப்புக் கொண்டதாக நமக்குத் தகவல் வந்துள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் சந்தியாவுக்கும் இடையிலிருந்து உறவுச் சிக்கலே, விபரீதத்தில் முடிந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து சந்தியாவின் மீதமுள்ள உடல் பாகங்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.