எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
New Delhi: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவின் அணிவகுப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில், மேலும் ஒரு ஆதரவாளர் படுகாயமடைந்துள்ளார். எனினும், நரேஷ் யாதவ் எந்தவொரு காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இவர்கள் அணிவகுப்பு சென்ற புகைப்படங்களில், ஆதரவாளர் அசோக் மான் நரேஷ் யாதவுக்கு பின்பாக நிற்கிறார். அவர் கேமராக்களை பார்த்து சிரித்தபடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டதாக தெரிகிறது. அதில், ஒருவர் போலீஸ் வசம் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறும்போது, அசோக் மான் மற்றும் காயமடைந்த அவரது உறவினர் ஹரேந்தர் ஆகியோரைக் கொல்வதே அந்த நபர்கள் நோக்கமாக கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏவை கொலை செய்ய தாங்கள் திட்டமிடவில்லை என போலீசாரிடம் பிடிபட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, எம்.எல்.ஏ நரேஷ் யாதவின் அணிவகுப்பு வாகனம் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆம் ஆத்மி ஆதரவாளரான அசோக் மான் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம் ஆத்மி குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்டோம் என்றும், அவரது ஆத்ம சந்தியடையட்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10.30 மணி அளவில் டெல்லி கிசான்கார் கிராமம் அருகே திறந்தவெளி வாகனத்தில் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த படி, எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் வந்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திறந்தவெளி வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவர்களது வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் அது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போடப்பட்ட பட்டாசு தான் என்று நினைத்துள்ளனர். பின்னர் அது தனது வாகனத்தின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் என்பதை அறிந்ததும், அவர் வேறு ஒரு காரில் ஏறி புறப்பட்டு சென்றதாக நரேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.