This Article is From Apr 04, 2019

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

வேலூரில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில், அந்த தொகுதியல் உள்ள வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் துரைமுருகன் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், துரைமுருகன் உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துரைமுருகன் உறவினர் வீட்டில் 200 ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டகட்டாக பணம் மூடை மூடையாக சிக்கியது. அதில், ஒவ்வொரு கட்டிலும் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தெரு பெயர், விலாசம் உள்ளிட்ட குறிப்புகளும் அடங்கியிருந்தது.

இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சிக்கிய பணம் யாருடையது, அது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தொற்றுநோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை, ஓட்டுக்கு என் கட்சியினர் பணம் கொடுத்தாலும் காட்டிக்கொடுப்பேன். பணம் கொடுத்து வாக்கு கேட்பது அவமானம். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம் என்று கூறினார்.

மேலும் படிக்க : தேசிய அரசியலில் கமல்ஹாசன் - அந்தமானில் மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்!!
 


 

.