This Article is From May 25, 2020

ஊரக வேலை நாட்களை 200ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இப்போதைய நிலையில், வருவாய் இல்லாத மக்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக உருவெடுத்திருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தான்.

Advertisement
தமிழ்நாடு Edited by

ஊரக வேலை நாட்களை 200ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களா உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுளார். 

இதுதொடர்பாக மேலும் ராமதாஸ் கூறியதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100% பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் நடப்பு மே மாதத்தில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மே மாதத்தில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக பணிக்கு வந்தவர்களை விட இப்போது திருவாரூர் மாவட்டத்தில் 187 விழுக்காட்டினரும், திருநெல்வேலி - தென்காசி மாவட்டத்தில் 159 விழுக்காட்டினரும், மதுரை மாவட்டத்தில் 156 விழுக்காட்டினரும் கூடுதலாக பணிக்கு வந்துள்ளனர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணிக்கு வந்துள்ளனர். இந்த மாவட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணிக்கு வந்ததைப் போன்று 400% மக்கள் இந்த மாதத்தில் பணிக்கு வந்திருக்கின்றனர். இது கடந்த காலங்களில் இல்லாத உயர்வாகும்.

Advertisement

மேற்கண்ட இரு புள்ளிவிவரங்களும் சொல்லும் உண்மை என்னவெனில் அமைப்பு சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. அடுத்த சில மாதங்களுக்கு அங்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இல்லை.

அமைப்புசாராத துறைகள் எப்போது முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்; அங்கு எப்போது வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இப்போதைய நிலையில், வருவாய் இல்லாத மக்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக உருவெடுத்திருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தான்.

Advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணியாற்றி, வேலை இழந்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்க இதுவே காரணமாகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் இப்போது தான் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதால், இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல குடும்பங்கள் இரு வேளையாவது பசியாறுவதற்கு இந்தத் திட்டம் தான் காரணமாகும்.

Advertisement

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாராத வேலைவாய்ப்பு சந்தை புத்துயிர் பெறுவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம், இத்திட்டமாகவே இருக்கும்.

ஆனால், இத்திட்டத்திற்காக தமிழகத்திற்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.1,436.81 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதைக்கொண்டு இத்திட்டத்தின்படியான வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. இத்திட்டத்தின்படி சராசரியாக ஒரு குடும்பத்திற்கு மாதம் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது; தினமும் ரூ.256 ஊதியம் வழங்கப்பட வேண்டிய நிலையில் சராசரியாக ரூ.200 மட்டுமே வழங்கப்படுகிறது.

Advertisement

அவ்வாறு இருந்தும் கூட, இத்திட்டத்தின் கீழ் அதிகம் பேர் வேலை கோரும் போது, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வறுமையை ஒழிப்பதற்காக வேலை வழங்கும் திட்டம் மட்டுமல்ல; கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி, இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வைக்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை உடனடியாக நுகர்வோர் சந்தைக்குச் சென்று பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.

Advertisement

ஆகவே இத்திட்டத்திற்கு எவ்வளவு அதிக நிதி ஒதுக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளது.

தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக இன்னொரு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடியும்.

அதன் மூலம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க முடியும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். எனவே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்; இக்கோரிக்கையை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement