This Article is From Dec 13, 2018

இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வெள்ளியன்று வரை முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

இயக்குநர் முருதாஸ் மீது வரும் வெள்ளிக்கிழமை வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

தமிழில் அட்லியின் ‘மெர்சல்' படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள ‘சர்கார்' படம் கடந்த மாதம் நவம்பர் 6-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, பல தியேட்டர்களில் ‘சர்கார்' படத்தின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்து போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

இது தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன் ஜாமீன் கேட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். பின், அவரை கைது செய்ய நவம்பர் 27-ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது.

சமீபத்தில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. 'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில் அரசை விமர்சிப்பது போன்ற காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் “அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டு அதுவரைக்கும் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

.