16 நாட்களுக்கு இந்த ரயில் பயணம் இருக்கும்
New Delhi: புகழ்வாய்ந்த இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு சுற்றுலா ரயிலான இந்த ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் டெல்லியின் சஃப்தார்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. டெல்லியில் தொடங்கி தமிழகத்தின் ராமேஸ்வரம் வரையில் ராமாயணம் தொடர்புடைய பகுதிகளை எல்லாம் 16 நாள்களில் இந்த ரயில் வலம் வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று முதல் நாளில் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் 800 பயணிகளுடன் தனது முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலின் சுற்றுலா யாத்திரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு பிரிவுகள் உள்ளன.
இந்தியாவில் டெல்லியில் இருந்து கிளம்பும் ரயில் முதல் நிறுத்தமாக அயோத்தியில் நிற்கும். அதற்கு அடுத்ததாக ஹனுமன் கர்கி ராம்கோட் மற்றும் கனக் பவன் ஆகிய இரண்டு கோயில்களுக்குச் செல்லும். அதைத் தொடர்ந்து ராமகாதையின் முக்கிய தளங்களாகக் கருதப்படும் நந்திகிராமம், சிதாமர்ஹி, ஜனக்பூர், வாரனாசி, பிரயாக், ஷிர்ங்வேர்பூர், சித்ரகூடம், நாசிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு ரயில் செல்கிறது.
இதற்கு மேலும் இலங்கை பயணத்துக்கு விருப்பம் தெரிவிக்கும் சுற்றுலா பயணிகளுக்காக தனி கட்டணம் வசூலிக்கப்படும். இலங்கை பயணம் விமானம் மூலம் நடைபெறும். சென்னை முதல் கொலும்பு வரையில் ஆறு நாள் சுற்றுலா பயணத்துக்கு நபர் ஒருவருக்கு 47,600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில் சுற்றுலா பயணத்தின் கட்டணத்திலேயே உணவு, இருப்பிடம், சுற்றுலா தளங்களுக்கான கட்டணம் என அனைத்தும் அடங்கும்.
ஒட்டுமொத்த பயணத்தின் போது இந்திய ரயில்வே துறையின் சுற்றுலா பொறுப்பு மேலாளர்களிடமே இருக்கும். மேலாளர்கள் பயணிகளுடன் பயணித்து அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.