This Article is From Jun 15, 2018

ஜம்மூ காஷ்மீரில் பிரபல பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை!

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஷுஜாத் புகாரி

ஹைலைட்ஸ்

  • 'ரைசிங் காஷ்மீர்' இதழின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி
  • கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அவருடன் பாதுகாப்புக்கு காவலர்கள் உள்ளனர்
  • நேற்று மாலை 7:30 மணி அளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
Srinagar:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுஜாத் புகாரி, நேற்று ஸ்ரீநகரில் இருக்கும் தனது செய்தித்தாள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல மாலை 7:30 அளவில் வெளியே வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து புகாரி மற்றும் அவரது பாதுகாப்புக்காக இருந்த காவலர்களையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் புகாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முக்கியமான பத்திரிகையின் ஆசிரியரே இப்படி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு அவர் மீது நடந்த தாக்குதலை அடுத்து, அவருடன் பாதுகாப்புக்கு காவலர்கள் இருக்கும்படி செய்தது அரசு. இருந்தும் நேற்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

இந்த சம்பவத்தை ரைசிங் காஷ்மீர் அலுவலகத்தின் அருகிலிருந்த சிசிடிவி கேமரா ஒன்று பதிவு செய்ததில், கொலையாளிகள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது. அவர்களில், வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மட் அணிந்திருந்தார். மற்ற இருவர்களும் தங்களின் அடையாளத்தை மறைக்க முகமூடி போட்டிருந்தது தெரிகிறது. ஒரு பையில் அவர்கள், துப்பாக்கியை மறைத்து எடுத்துச் செல்வதும் வீடியோ பதிவில் தெளிவாக பார்க்க முடிகிறது.

shujaat bukhari killers

இச்சம்வம் குறித்து ஜம்மூ காஷ்மீர் போலீஸின் உயர் அதிகாரி எஸ்.பி.வைத், 'கொலையாளிகள் ஷுஜாத் புகாரி, வெளியே வருவதற்கு வெகு நேரம் காத்திருந்தது தெரிகிறது. இது ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட செயல். ஆனால், இதுவரை இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஷுஜாத் புகாரியுடன் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களையும் கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. எல்லாரும் ரம்ஜான் அன்று வீட்டுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து இதைச் செய்துள்ளனர்' என்று தெரிவித்தார். 

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் மெஹுபூபா முப்டி, போலீஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஷுஜாத் புகாரி உடலைப் பார்க்க வந்தார். அப்போது அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். 'என்னை சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் பார்க்க வந்தார். அவர் இறந்துவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை' என்று முப்டி வருத்தப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர் ஷுஜாத் புகாரியை கொன்றிருப்பது ஒரு கோழைத்தனமான செயல். காஷ்மீரின் குரலை ஒடுக்குவதற்காகவே இப்படி செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் அஞ்சாத பத்திரிகையாளர் புகாரி. அவரின் இறப்பு எனக்கு பேரதிர்ச்சியையும் வலியையும் கொடுக்கிறது. அவரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' என்று ட்விட்டரில் கருத்திட்டுள்ளார்.

இந்திய அளவில் இருக்கும் முக்கிய பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இந்த சம்பவத்துக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியான ஒரு இடத்தில் இருக்கிறது என்பதை இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். அரசு, பத்திரிகையாளர்கள் யாருக்கும் அஞ்சாத வண்ணம் தங்களது கடமையைச் செய்ய உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்துள்ளனர்.

.