Read in English
This Article is From Nov 17, 2018

சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு… மாநிலம் தழுவிய பந்த்!

Sabarimala temple protests: கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்’ என்று உத்தரவிட்டது

Advertisement
இந்தியா Posted by
New Delhi :

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, மூன்றாவது முறையாக கோயில் நடை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே.பி.சசிகலாவை கேரள அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு கோயில் திறக்கப்பட்டிருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். 

10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கேரள போலீஸிடம் தாங்கள் தரிசனம் செய்யப் போவதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். சபரிமலையைச் சுற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பெண்களை கோயிலுக்குள் உள்ளே விடாதவாறு பார்த்துக் கொள்வோம் என்று வலதுசாரி போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து 10 முக்கிய தகவல்கள்:

  1. இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் சசிகலா நேற்று மாலை கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்டார். 
  2. கேரள அரசு, ‘உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை நாங்கள் பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் தேவச‌ம் போர்டு, ‘உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற அதிக நேரம் கேட்போம்' என்று கூறியுள்ளது. 
  3. கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இதுவரை ஐயப்பன் கோயில் 3 முறை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
  4. 'மகரவிளக்கு' பூஜைகளுக்காக நேற்று மாறை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்கு கோயில் திறந்த நிலையில் தான் இருக்கும். 
  5. முதன்முறையாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள், அவர்களின் அடையாள அட்டையைக் காண்பித்து போலீஸிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  6. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கேரள போலீஸிடம் தாங்கள் தரிசனம் செய்யப் போவதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் பட்டணம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூவ், ‘எங்களிடம் இதுவரை ஒரு பெண் கூட பாதுகாப்பு தருமாறு அணுகவில்லை' என்று தெரிவித்துள்ளார். 
  7. சபரிமலையைச் சுற்றி 15,000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் கொண்ட கமாண்டோ காவல் படையும், 234 பேர் கொண்ட வெடிகுண்டு படையும் பாதுகாப்புக்காக உஷார் நிலையில் இருக்கின்றனர். 
  8. நேற்று செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் சபரிமலைக்கு செல்வதற்காக கொச்சி விமானநிலையத்திற்கு வந்தார். அங்கேயே அவருக்கு எதிராக போராட்டம் செய்யப்பட்டதால், மீண்டும் அவர் சொந்த ஊர் நோக்கி திரும்ப செல்லும்படியானது.
  9. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் முன்னர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. 
  10. உச்ச நீதிமன்றம், உத்தரவுக்குப் பிறகு சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Advertisement
Advertisement