சிஏஏ-வை எதிர்ப்பவர்கள், இது முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மையை மீறுவதாகவும் இருப்பதாக வாதிடுகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழக அளவில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நேற்று கலந்து கொண்டார்.
இது குறித்து ஸ்டாலின், ““முரசொலி” அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டையில், கழகத்தினர் நடத்திக் கொண்டிருந்த #SignatureAgainstCAA இயக்கத்தைப் பார்த்து அதில் நானும் பங்கேற்றேன்.
பாஜக - அதிமுக முகத்திரையைக் கிழித்தெறிய கழகத்தினர் முனைப்புடன் முழு வீச்சில் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட வேண்டும்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிஏஏ சட்டத்தின் மூலம் மத ஒடுக்குமுறைக்கு ஆளான 3 தேசங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற நாடுகளின் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்து வருகிறது.
அதே நேரத்தில் சிஏஏ-வை எதிர்ப்பவர்கள், இது முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மையை மீறுவதாகவும் இருப்பதாக வாதிடுகின்றனர். சிஏஏவுக்கு எதிராக இந்திய அளவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் இருக்கும் ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.