"தமிழகத்தில் மேலும் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்"
ஜெர்மனி, பின்லாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் ரூ.15,128 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போட்டுள்ளன.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கோவிட்-19 தொற்றுக்கு எதிராக நாம் போராடி வரும் நிலையில், சிறப்பு முதலீடு ஊக்குவிப்பு குழுவை நான் அமைத்திருந்தேன். அதன் விளைவாக, 17 நிறுவனங்களுடன் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளோம். அந்த நிறுவனங்கள் 15,128 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
இதன் மூலம் 47,150 பேருக்கு வேலை கிடைக்கும். தமிழகத்தில் மேலும் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று ட்விட்டர் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், “மிகவும் திறன் வாய்ந்த பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியும் அதிகமாக தமிழகத்தில் உள்ளது. அனைத்தையும்விட நாட்டிலேயே சட்ட ஒழுங்கை முறையாக பேணிக் காப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களையும் நான் வரவேற்கிறேன். முதலீட்டுக்கான மொத்த நடவடிக்கையின் போதும் நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்,” என்று விளக்கியுள்ளார்.