ஹைலைட்ஸ்
- உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய வைட்டமின் பி12 உதவுகிறது.
- இறைச்சிகளில் வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது.
- வைட்டமின் பி12 பற்றாக்குறையால் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
உடலுக்கு தேவையான சத்துகளுள் வைட்டமின் பி12 முக்கியமானது. நம் உடலால் தானாகவே வைட்டமின் சத்துக்களை தயார் செய்ய முடியாது. உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏ தயாரிப்பில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் உள்ள நரம்பு மண்டலம் சீராக இயங்குவதற்கு வைட்டமின் பி12 சத்து கட்டாயம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். இதனால் எலும்புகள் உறுதியாக இருப்பதுடன் ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படுகிறது. நாட்பட்ட வைட்டமின் பி12 பற்றாக்குறை நரம்பு மண்டலத்தில் சிக்கலை உண்டாக்கும். அதனால் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்ள வேண்டும்.
சோர்வு மற்றும் பலவீனம்:
வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்பட்டால் உடலில் சோர்வு மற்றும் பலவீனம் உண்டாகும். உடல் தானாகவே இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யாவிட்டால் உடலில் மற்ற உறுப்புகளுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இதனால் உடல் விரைவில் சோர்வடைந்துவிடும். மேலும் இரத்த சோகையையும் உண்டாக்கும்.
மூச்சுத்திணரல்:
வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது மூச்சுத்திணரல் பிரச்னை உண்டாகும். இரத்த சிவப்பணுக்கள் குறைவாகும்போது மூச்சுத்திணரல் ஏற்படும். அடிக்கடி மூச்சுத்திணரல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.
பார்வை குறைபாடு:
வைட்டமின் பி12 குறைபாடு பார்வை குறைபாட்டையும் உண்டாக்கும். இது நரம்பு மண்டலத்தையு பாதிக்கும் என்பதால் வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.
தோல் வெளிரி போதல்:
வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்பட்டால் சருமம் வெளிரி போய் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும்போது சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படுவது போலவே வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும்போதும் உண்டாகும். இதனால் சருமம் பொலிவின்றி சோர்வாக காணப்படும்.
மன அழுத்தம்:
வைட்டமின் பற்றாக்குறை மன நலனையும் பாதிக்கும். இதனால் உணர்ச்சி நிலையில் ஏற்றத்தாழ்வு மற்றும் மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்னைகள் ஏற்படும். மேலும் ஞாபக மறதி போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
உணவுகள்:
கோழி, ஆடு மற்றும் கடல் உணவுகளில் வைட்டமின் பி12 சத்துக்கள் நிறைந்திருக்கிறது. முட்டையிலும் வைட்டமின் பி12 சத்து இருக்கிறது. அடிக்கடி இறைச்சிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். யோகர்ட், கொழுப்பு சத்து குறைந்த பால், சீஸ், ஃபோர்டிஃபைடு டெய்ரி, செரல்ஸ், ஈஸ்ட் போன்ற சைவ உணவுகளிலும் வைட்டமின் பி12 இருக்கிறது.