நிலம் தொடர்பான ஆவணங்கள் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Muzaffarnagar: மசூதி ஒன்றை கட்டுவதற்கு 70 வயது சீக்கிய முதியவர் ஒருவர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
சீக்கியர்களின் குருவான குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழா சீக்கியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்த மாதம் முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் புர்காசி என்ற நகரில்,70 வயது சீக்கியர் சுக்பால் சிங் பேடி, மசூதி கட்டுவதற்கு 900 சதுர அடி நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலம் தொடர்பான ஆவணங்கள் நகர பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் பரூக்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை பேணும் வகையில், தாங்கள் புனிதமாக கருதும் குருநானக்கின் பிறந்த நாளையொட்டி இந்த நல்ல காரியத்தை செய்வதாக சீக்கியர் சுக்பால் சிங் கூறியுள்ளார்.
அவரது இந்த நடவடிக்கையை, சீக்கிய மற்றும் முஸ்லிம் மதத்தவர்கள் பாராட்டி வரவேற்றுள்ளனர்.