இன்னும் ஒரு சில நாட்களில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெருமுனைகளில் விநாயகரின் தற்காலிக சிலைகளை நிறுவ உள்ளனர். இந்த சிலை நிறுவுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது தமிழக அரசு. ஆகவே, இது கட்டுப்பாடு விதிகளை எதிர்த்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்தான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், சிங்கிள் விண்டோ முறையில் தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தது. நேற்று தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாரயண், ‘சிங்கிள் விண்டோ என்று சொல்லப்படும் ஒற்றை ஒப்புதல் முறையில் விநாயகர் சதூர்த்தியையொட்டி, சிலை நிறுவ அனுமதி கேட்பவர்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும். நகர்ப்புறங்களில் துணை கமிஷனருக்குக் கீழ் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். கிராமப்புறங்களில் டி.எஸ்.பி மூலம் ஒப்புதல் வழங்கப்படும்’ என்றார்.
மேலும் அவர், ‘சிலை நிறுவியதை அடுத்து, அக்கம் பக்கத்திலிருந்து மின்சாரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த வீட்டு உரிமையாளர்களின் ஒப்புதலை எழுத்துப் பூர்வமாக பெற்றிருக்க வேண்டும். சிலைக்கான உயரம் மற்றும் பிற அளவு சம்பந்தப்பட்ட விஷயம் இடத்துக்குத் தகுந்தாற் போல இருக்க வேண்டும்’ என்று வாதாடினார்.
இதையடுத்து பேசிய நீதிபதி மகாதேவன், ‘சட்டத்துக்குப் புறம்பாக மின்சாரம் எடுப்பதோ தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதோ இருக்கக் கூடாது’ என்று கறாராக சொல்லி இன்று இறுதி உத்தரவை பிறப்பிதாக கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)