Kolkata: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக இந்தியாவின் பிரதான எதிர்கட்சிகள் ஒன்றாக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த எதிர்கட்சியின் கூட்டணிக்கு என்னப் பெயர் என்பது குறித்து ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார் சிபிஎம் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய யெச்சூரி, ‘வரும் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் அணி திரளும். அதற்கான பெயர் கூட என்னவென்று எனக்கு தெரியும். ஆனால், அதை இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், அப்படி பாஜக-வுக்கு எதிராக அமையப் போகும் அரசியல் சக்தி மதச்சார்பின்மை கொள்கையை முன் வைக்கும். அதே நேரத்தில் அந்தக் கூட்டணி தேர்தலுக்குப் பிறகு தான் அமையுமே, தவிர தேர்தலுக்கு முன்னால் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.
அந்தக் கூட்டணியில் மேற்கு வங்கத்தில் சிபிஎம் கட்சியின் எதிரியாக இருக்கும் மம்தா பானர்ஜி இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று யெச்சூரியிடம் கேட்ட போது, ‘இந்தியாவைப் பொறுத்தவரை, மோடியை வெளியேற்றுங்கள் நாட்டைக் காப்பாறுங்கள்… மாநிலத்தைப் பொறுத்தவரை, மம்தாவை வெளியேற்றுங்கள், வங்கத்தைக் காப்பாற்றுங்கள்…’ என்று சொன்னார்.
இந்த பதிலின் மூலம் இந்திய அளவில் மம்தாவுடன் சிபிஎம் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாகவே சூசகமாக தெரிவித்துள்ளார் யெச்சூரி.