ஹைலைட்ஸ்
- இந்த சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது
- 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி
- இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்
New Delhi: மகாராஷ்டிரா மாநிலம் வர்தா அருகே உள்ள ஆயுதக் கிடங்கில் வெடிகுண்டு வெடித்ததில், வெடிகுண்டு செயலிழப்புப் பணியிலிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துள்ளனர். இன்று காலை நடந்த இச்சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று காலை 7.15 மணி அளவில் வெடிகுண்டு செயலிழப்புப் பணியின் போது வெடிகுண்டு வெடித்துவிட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணியின் போது 10 முதல் 15 பணியாளர்கள் வரையில் செயலிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகப் போலீஸார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடங்கில் புதைந்துகிடக்கும் வெடிகுண்டுகளைச் செயலிழக்கும் பணி மத்திய பிரதேசத்தின் கமரியா பகுதியைச் சேர்ந்த தொழிற்சாலை ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘காலி மனையில் செயலிழப்பு பணியின் போதே இந்த விபத்து நிகழ்ந்தது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ராணுவ பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கமாரியாவைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலைக்குத் தான் வெடிகுண்டு செயலிழப்புப் பணிக்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயலிழப்பு நடவடிக்கைக்கான குழி தோண்டுதல், வெடிகுண்டின் மீது மணல் மூடுகளை அடுக்குதல் ஆகியப் பணிகள் செய்யப்பட்டன' எனக் கூறியுள்ளார்.
படுகாயமடைந்த 10 பேரில் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு தொழிற்சாலைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக விரைந்துள்ளனர். இதுபோலவே கடந்த 2016-ம் ஆண்டு புல்கான் ஆயுதக் கிடங்கில் நடந்த பணியின் போது குண்டு வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.