தாங்கள் யார் என்கிற விவரத்தை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஊடகத்தின் முன்பு தெரிவிக்க வேண்டும் என புதின் வலியுறுத்தியுள்ளார்
Vladivostok, Russia: இங்கிலாந்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யுலியா ஆகியோரை கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உளவாளிகள் இல்லை என்றும் அவர்கள் சாதாரண பொதுமக்கள் என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த உளவாளி செர்ஜி ஸ்கிரிபால் இங்கிலாந்திடம் பணம் பெற்றுக் கொண்டு தனது நாட்டின் ரகசிய தகவல்களை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
அவரை கொல்வதற்கு ரஷ்ய ராணுவம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் 4-ந்தேதி இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகரில் வைத்து ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யுலியா ஆகியோரை கொலை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன.
இதனை ரஷ்ய அரசுதான் செய்ததாக இங்கிலாந்து அரசு சந்தேகம் கொண்டது. இதுதொடர்பாக அலெக்சாண்டர் பெட்ரோ மற்றும் ரஸ்லான் போஷிரோவ் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “ கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 2 பேரும் சாதாரண பொதுமக்கள். குற்றவாளிகள் கிடையாது. அவர்களை எங்களுக்கு நன்றாக தெரியும். பத்திரிகையாளர்கள் முன்பு தாங்கள் யார் என்பதை 2 பேரும் தெரிவிப்பார்கள்” என்று கூறினார்