தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்புமணி, தங்கமணி ஆகியோர் கோபாலபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சற்று நலிவுற்றிருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. வயது முதிர்வு காரணமாகவே இந்த நலிவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதால், அவருக்கு காய்ச்சல் உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்களும், செவலியர்களும் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருப்பதற்கு ஈடான உபகரணங்கள் கொண்டு, அவரின் இல்லத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, தொண்டர்கள் யாரும் பார்வையிட வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.