அடுத்த வாரம் முதல் சில வியாபார மையங்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படும் என்று ஸ்லோவெனியா அரசு அறிவித்தது.
ஹைலைட்ஸ்
- கொரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன
- இத்தாலிதான் ஐரோப்பிவிலேயே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டது
- பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டன
Ljubljana, Slovenia: ஐரோப்பாவின் ஸ்லோவெனியா நாடு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது. இந்த முடிவினால் தங்களின் எல்லைகளைத் திறந்துள்ளது அந்நாடு. ஸ்லோவெனியாவில் தொடர்ந்து புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்லோவெனியாவின் பிரதமர் ஜானெஸ் ஜென்ஸா, “ஐரோப்பாவிலேயே கொரோனா விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படாத இடத்தில் இருக்கிறது ஸ்லோவெனியா. இதனால், இந்த நோய்த் தொற்றிலிருந்து நாம் விடுபட்டதாக அறிவிக்க முடிகிறது,” என்று தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்லோவெனியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
20 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஸ்லோவெனியா, இத்தாலியை அண்டை நாடாகக் கொண்டுள்ளது. இதுவரை அங்கு 1,500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 103 பேர் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.
ஆனால் அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதனால், நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டதாக ஸ்லோவெனியா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது ஸ்லோவெனியாவுக்குள் ஐரோப்பிய குடிமக்கள் வர முடியும். அதே நேரத்தில் ஐரோப்பிய குடிமக்கள் அல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவெனியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமூக விலகல் விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பொது இடங்களில் முகவுரைகள் அணிவது கட்டாயமாகும். பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட விதிமுறைகள் தொடரும்.
அடுத்த வாரம் முதல் சில வியாபார மையங்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படும் என்று ஸ்லோவெனியா அரசு அறிவித்தது.
மே 23 முதல் கால்பந்து உள்ளிட்ட அனைத்து குழு விளையாட்டுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து ஸ்லோவெனியா விடுபட்டுவிட்டதாக அறிவித்திருந்தாலும், நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் பார்க்கின்றனர்.