This Article is From Dec 19, 2018

''அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் மெதுவாக வந்து சேரும்''- மத்திய அமைச்சர் உறுதி

நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் பணத்தை போடுவதற்கு முயற்சி நடந்து வருவதாக மத்திய அமைச்சர் கூறியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

''அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் மெதுவாக வந்து சேரும்''- மத்திய அமைச்சர் உறுதி

2019 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்பார் என்று ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார்.

Mumbai:

நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் பணம் ஒரே நேரத்தில் வராது. கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலோ கூறியிள்ளார். அவரது பேச்சு நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே மத்திய பாஜக அரசில் சமூக நலத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். கடந்த 2014 தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அனைத்தையும் மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சத்தை போடுவதாக வாக்குறுதி அளித்தார்.

அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன. இருப்பினும், இதுதொடர்பாக பாஜக தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் மெதுவாக வந்து விடும். ஒரே நேரத்தில் வராது. மத்திய அரசிடம் அந்த அளவுக்கு பணம் ஏதும் இல்லை. அதனை தருமாறு ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு கேட்டது. ஆனால் அதனை ரிசர்வ் வங்கி தரவில்லை. எனவே அந்த பணத்தை மத்திய அரசால் திரட்ட முடியவில்லை. ஆளுக்கு ரூ. 15 லட்சம் தருவோம் என்று சொன்னது உண்மைதான். அதனை நிறைவேற்றுவதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன.'' என்று கூறினார்.

அவரது விளக்கம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. இதுபற்றி அத்வாலேவிடம் கேட்டதற்கு, மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும். மோடி பிரதமராக மீண்டும் பொறுப்பு ஏற்பார் என்று கூறினார்.

.