ரூ.4.71 கோடி செத்துக்கள் உள்ளதாக ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
Amethi: மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி தனது வேட்பு மனு தாக்கலில் தாம் பட்டபடிப்பு முடிக்கவில்லை என கூறியுள்ளார்.
இந்த முறையே வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதி குறித்த விவரங்களை ஸ்மருதி இரானி சரியாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, 3 வருட பட்டப்படிப்பை தான் முழுமையாக முடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதே தொகுதியில் ராகுல் காந்தி இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த முறையும் அவரை எதிர்த்து ஸ்மிருதி இரானியை வேட்பாளராக அறிவித்தது பாஜக.
இந்நிலையில், அமேதியில் நேற்று ஸ்மிருதி இரானி வேட்பு மனு தாக்கல் செய்தார். அமேதியில் நேற்று முன்தினம் ராகுல் காந்தி ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் நேற்று ஸ்மிருதியும் தனது கணவர் சுபின் இராணியுடன், பாஜக தொண்டர்கள் படைசூழ ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அந்த வேட்புமனுவில், உயர்கல்வி தகுதியில், டெல்லி பல்கலைக்கழத்தில் தொலைத்தூரக் கல்வியாக (பி.காம்) இளங்கலை வணிகவியல் படித்ததாகவும், ஆனால், 3 வருட பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஸ்மிருதி இரானி, 42 தனது வேட்புமனு தாக்கலில் 1994ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு முடித்தாக தவறான தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கபில் சிபிலுக்கு எதிராக போட்டியிட்ட அவர், தனது வேட்புமனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1996ல் பி.ஏ பட்டப்படிப்பை முடித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அவர் தனது வேட்புமனுவில், ரூ.4.71 கோடி சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்மிருதி இரானி தனது கல்வித்தகுதி குறித்த முரண்பாடான தகவல்களை வழங்கியுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.