புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணியிடம் ஒருவர், ‘எப்போது உங்களைப் பிரதமராக பார்க்க முடியும்?’ என்று கேட்டார்.
ஹைலைட்ஸ்
- இராணியிடம், 'பிரதமராவதற்கு வாய்ப்புள்ளதா?' என்று கேட்கப்பட்டது
- ஆற்றல் மிக்கத் தலைவர்களுக்குக் கீழ் பணி செய்யவே அரசியலுக்கு வந்தேன்,இராணி
- மோடி இன்னும் வெகு காலம் களத்தில் இருப்பார், இராணி
Pune: இந்திய பிரதமர் நரேந்திர மோடி எப்போது அரசியலை விட்டு விலகுகிறாரோ அப்போது தானும் விலகிவிடுவேன் என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.
புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராணியிடம் ஒருவர், ‘எப்போது உங்களைப் பிரதமராக பார்க்க முடியும்?' என்று கேட்டார்.
அதற்கு இராணி, ‘எப்போதும் இல்லை. ஏனென்றால், நான் அரசியலில் நுழைந்ததற்குக் காரணம், ஆற்றல் மிக்கத் தலைவர்களுக்குக் கீழ் வேலை செய்யத்தான். அடல் பிகாரி வாஜ்பாய்க்குக் கீழ் பணி செய்தது எனக்கு வாய்த்த பாக்கியம். இப்போது நான் பிரதமர் மோடிக்குக் கீழ் வேலை செய்வதும் பெருமையே' என்றார்.
அவர் தொடர்ந்து, ‘எப்போது பிரதமர் மோடி, அரசியலை விட்டு விலகுகிறாரோ, அப்போது நானும் இந்திய அரசியலை விட்டு விலகிவிடுவேன். இப்படி சொல்வதன் மூலம் மோடி, வெகு காலம் இந்திய அரசியலில் ஈடுபட மாட்டாரா என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அவர் இன்னும் வெகு நாட்களுக்கு களத்தில் இருப்பார். அரசியலில் எத்தனைக் காலம் நீடித்திருக்க வேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன்' என்று பதிலளித்தார்.
இன்னொரு பார்வையாளர், ‘2014 தேர்தல் போன்று இந்த முறையும் ராகுல் காந்திக்கு எதிராக நீங்கள் தேர்தலை சந்திப்பீர்களா?' என்று கேட்டார்.
‘அது என் கையில் இல்லை. கட்சியின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு நான் கட்டுப்படுவேன். 2014 ஆம் ஆண்டு, யார் ஸ்மிருதி இராணி என்று கேட்டனர். தற்போது எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது' என்று கூறினார். அமேதி லோக்சபா தொகுதியில், 2014-ல் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்ட இராணி தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.