This Article is From Dec 31, 2019

புத்தாண்டில் Kashmir-க்கு நற்செய்தி: எஸ்.எம்.எஸ் சேவைக்கு மீண்டும் அனுமதி!

Jammu and Kashmir - காஷ்மீரில் அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து விடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன

Kashmir - நேற்று, வீட்டுச் சிறையில் இருந்த தேசிய கான்ஃபரென்ஸ் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 5 முக்கியப் புள்ளிகள் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டனர்.

New Delhi:

காஷ்மீரில் (Kashmir) சுமார் 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.எம்.எஸ் சேவையை புத்தாண்டு முதல் மீண்டும் கொடுக்க உள்ளது மத்திய அரசு. அதேபோல காஷ்மீரில் (Kashmir) இருக்கும் மருத்துவமனைகளிலும் இணைய சேவை மீண்டும் கொடுக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இணைய சேவை கொடுக்கப்படாது எனத் தெரிகிறது. 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கும் வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கப்பட்டன. 

இந்நிலையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் செய்தித் தொடர்பாளர், ரோகித் கன்சால், இந்த தடை நீக்கம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

அதேபோல, ஜம்மூ காஷ்மீரில் உள்ள லக்கான்பூரில் சரக்குகளுக்கு விதிக்கப்படும் லெவி வரி விதிப்பும் புத்தாண்டு முதல் திருமபப் பெறப்படும் என்று ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிடுமாறு ஜம்மூ காஷ்மீர் கனரக வாகன ஓட்டிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். ஜம்மூ காஷ்மீர் போக்குவரத்து நலச் சங்கமும் இந்த கோரிக்கையை முன்வைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீரில் அரசு எடுத்த முடிவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து விடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நேற்று, வீட்டுச் சிறையில் இருந்த தேசிய கான்ஃபரென்ஸ் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 5 முக்கியப் புள்ளிகள் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்டி ஆகியோர் தொடர்ந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே மத்திய அரசு, முக்கிய அரசியல் புள்ளிகளை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது. அவர்கள் மக்களை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜம்மூவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது லடாக் யூனியன் பிரதேசமாக மாறியிருக்கும் கார்கிலில் மொபைல் இணைய சேவை மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

.