This Article is From Mar 17, 2020

'கொரோனா அச்சுறுத்தலை சென்னை மக்கள் இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை' : அஷ்வின் ஆதங்கம்

இந்தியாவில் நிலவும் வெப்பநிலை காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக உள்ளதென நம்பப்படுகிறது. அதிக வெப்பத்தில் கொரோனா பரவாது என்று கூறப்படும் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

'கொரோனா அச்சுறுத்தலை சென்னை மக்கள் இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை' : அஷ்வின் ஆதங்கம்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • கோடை வெயிலில் கொரோனா பரவாது என்ற கருத்து பரவலாக உள்ளது
  • ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது
  • மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் அஷ்வின்

கொரோனா அச்சுறுத்தலைச் சென்னை மக்கள் இன்னும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கிரிக்கெட் வீரரும் சென்னையைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், 'கொரோனா பரவுவதைத் தடுக்க ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதனைச் சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. வெயில் கொளுத்துகிறது என்பதால் கொரோனா பரவாது அல்லது கொரோனா பாதிப்பே ஏற்படாது என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்றுகூடுவதால் கொரோனா பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு டெல்லியில் 50 பேருக்கும் அதிகமானோர் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் கேரளா உள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-யை எட்டியுள்ளது.

சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டம் காணச் செய்து வருகிறது. இத்தாலியில் ஒரே நாளில் மட்டும் 368 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகில் 140-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. எப்போது நிலைமை இயல்புக்குத் திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். 

.