தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல குறைக்கப்படுகின்றன.
ஹைலைட்ஸ்
- பதற்றத்தை குறைப்பதற்காக இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
- காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது
- மார்ச் 17-ம்தேதி வரையில் மட்டுமே கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கும்
New Delhi: ஜம்மு காஷ்மீரில் சமூக வலைதளங்கள், இணையத்தின் மீதான தடை நீங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மாலை முதற்கொண்டு சமூக வலைதளம், இணையத்தை பயன்படுத்துவதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று கூறினர்.
இருப்பினும், 2ஜி சேவை மட்டுமே வழங்கப்படும். 4ஜி சேவைகள் மீதான தடை தொடர்கிறது. ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த தளர்வு, மார்ச் 17-ம்தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று மாநிலத்தின் முதன்மை செயலர் ஷலீன் கப்ரா தெரிவித்துள்ளார்.
மார்ச் 17-க்குள் சேவையை நீட்டித்து உத்தரவு வந்தால் சேவை நீட்டிக்கப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்பு சட்ட பிரிவு 370-யை நீக்கி நடவடிக்கை எடுத்தது.
இதனால் வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக மத்திய அரசு இணையம், சமூக வலைதளம்,தொலைப்பேசி, தொலைத் தொடர்பு சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல குறைக்கப்படுகின்றன.
ஜனவரி மாதம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சில இடங்களில் அரசு இணைய சேவையை திரும்பக் கொண்டு வந்தது. அப்போது சமூக வலைதள பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. அரசால் அனுமதிக்கப்பட்ட இணைய தளங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. குறிப்பாக வங்கி சேவை இணையதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர், காஷ்மீர் - லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை ஜனவரியில் விசாரித்த உச்ச நீதிமன்றம், காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், மக்கள் சுதந்திரமாக நடமாடுதல், இன்டர்நெட் சேவையை தடுத்தல் ஆகியவற்றின் மூலம் ஆட்சி செலுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் அரசை கண்டித்திருந்தது.