18 வருசத்துக்கு முன்னாடி நடந்ததா சொல்றாங்க. அப்போ அவன் பெரிய ஆள் கூட இல்லையாம். ஒரு மாளிகையில தன் குழுவோட வேலைக்கு சென்றாத சொல்றாங்க. அங்க அவரு தன் குழுவில் இருந்தவங்களுக்கு என்ன வேலை செய்யனும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. அப்போ, அவருக்கு நேரா மேல நின்னு ஆணி பிடிங்கிட்டு இருந்த அவரோட அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி, அவர் நடு மண்டையில சுத்தியலை போட்டு, அவர் அங்கேயே மூச்சு பேச்சில்லாம சுருண்டு விழுந்துட்டார். இது நடந்து 18 வருசம் ஆச்சு, இப்ப திரும்பவும் நேசமணியை பற்றி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அவர் அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி உள்நோக்கத்தோடதான் சுத்தியலை தலைமேல வேணும்னேதான் செஞ்சிருக்கார், கிருஷ்ணமூர்த்திக்கும் நேசமணிக்கு முன்விரோதம் இருந்துச்சு அப்படினு நெரைய பேர் சொல்றாங்க. ஆன இதுக்கெல்லாம், ஒரு வலுவான சாட்சி இன்னும் கிடைக்கல.
நேசமணியோட உடல்நிலை பற்றி கவலையடந்த மக்கள் #Pray_For_Nesamani அப்படிங்கிற ஹேஸ்டேக்ல, சமூக வலைதளங்கள்ல நேசமணிக்காக வேண்டிக்கிட்டு வர்றாங்க. மேலும், அவங்க கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யனும்னு வேண்டுகோள் வைக்கிறாங்க. மேலும், இந்த சம்பவத்துல, கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்களான அரவிந்த் மற்றும் சந்துருவிற்கும் சமந்தம் இருக்கிறதா சொல்லப்படுது. மேலும், முன்னதாக இவங்க மூனு பேர் நேசமணி மேல ஒரு கொலை முயற்சி செஞ்சதாவும் கூறப்படுது.
நேற்று வரை, தமிழக அரசியல், இந்திய அரசியல், மோடி என ட்விட்டரில் ட்ரெண்டாக இருந்தது. அந்த ட்ரெண்டை மாற்றி அமைத்திருக்கிறார், வடிவேலு. வடிவேலு ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் தனித்துவமானவை. அது எந்த காலத்திலும் அழியாதவை, அனைத்து காலத்திற்கும் ஏற்றவாறு இருக்கும். மேலும், மீம் கிரியேட்டர்களுக்கு வடிவேலு டெம்ப்லேட்கள்தான் பிரமாஸ்திரம். சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்களில் பெரும்பான்மையானவை வடிவேலுவின் புகைப்படங்களை ஏந்தியே இருக்கும். சுருக்கமாக சொன்னால், சமூக வலைதளங்களில், இந்த காமெடியன் வடிவேலு தான் 'எவர்கிரீன் ஹீரோ!'
அப்படி இவர் 18 வருடங்களுக்கு முன் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் தான், நேசமணி, காண்ட்ரேக்டர் நேசமணி. காண்ட்ரேக்டர் நேசமணி என்ற உடனே, அந்த கரியில் மூழ்கி தேங்காய் மஞ்சியால் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த வடிவேலு தான் நம் மனதின் முன் வந்து நிற்பார். அப்போது கூட, ரமேஷ் கண்ணா கூட,"சுரண்டுனது போதும்டா, அது அவரோட ஒரிஜினல் கலரு, சுரண்டி சுரண்டி தோலை உருச்சிராதீங்க" என்பார்.
சரி, இப்போது இந்த நேசமணி எப்படி ட்விட்டர் ட்ரெண்டை மாற்றினார்?
'ஆணியே புடுங்க வேண்டாம்!', அந்த படத்தில் வரும் ஒரு ஐடியல் டயாலாக். அந்த காமெடி தான், அதில் வரும் அந்த ஆணி பிடுங்கும் சுத்தியல் தான், இப்போது நேசமணி ட்ரெண்டாக காரணம். அந்த காமெடியில், ரமேஷ் கண்ணாவை ஆணி பிடுங்க மேலே அனுப்புவார், வடிவேலு. மேலே சென்று ஆணி பிடுங்கிக்கொண்டிருந்த அவருடைய கையில் இருந்து சுத்தியல் திடீரென்று நலுவி வடிவேலுவின் மண்டையில் விழும். அப்போது, அவர் ஒரு சுழல் சுழன்று கீழே விழுவார். டாப் ஏங்கிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த காட்சி. அதுதான், இப்போது நேசமணியை ட்விட்டர் மற்றும் மற்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் '#Pray_For_Nesamani' என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கியுள்ள நெடிசன்கள், 'சுத்தியல் மண்டையில் விழுந்ததால் பலமாக காயமடைந்து தீவிர சிகிச்சையில் நேசமணி உள்ளார், அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்', 'கிருஷ்ணமூர்த்தி முன்விரோதம் காரணமாக சுத்தியலை வடிவேலுவின் மண்டையில் போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார், அவரை கைது செய்ய வேண்டும்', 'அரவிந்த் மற்றும் சந்துரு-விற்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது, அவர்களையும் கைது செய்ய வேண்டும்', இது போன்று கூறி இந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கியுள்ளனர்.
இது எங்கு துவங்கியது?
ஓரு பிரபலமான சிவில் இஞ்சினியரிங் துறை சார்ந்த பக்கத்தில், நேற்று சுத்தியல் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு 'இது என்ன?' என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அந்த பதிவிற்கு கீழே கமெண்ட் செய்த ஒருவர்,"இது சுத்தியல், இதை பயன்படுத்தும்போது 'டங்! டங்!' என்று சத்தம் கேட்கும். ஒரு ஜமீன் மாளிகையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, பெய்ன்ட் காண்ட்ரேக்டர் நேசமணியின் தலைமீது, சுத்தியலை போட்டுவிடுவார்கள். பாவம்" என்று கூறியிருப்பார். அதற்கு "அவர் இப்போது நலமாக உள்ளார், நாம் அவருக்காக வேண்டிக்கொள்வோம், #Pray_For_Nesamani" என்று பதிலளித்திருப்பார். அங்கு தான், இந்த சம்பவம் துவங்கியது. இன்று, இது உலக அளவு ட்ரெண்டிங் ஹேஸ்டேக். நேசமணி என்ற ஒரு தமிழனை உலக அளவில் ட்ரெண்டிங் செய்த பெருமை நம் நெடிசன்களையே சேரும்.
பிரபலங்களின் பதிவுகள்!
இந்த சம்பவத்திற்கு பிறகு, பல செய்தி நிறுவனங்கள் நேசமணி உன்மையாகவே அடிபட்டு ஆபத்தான நிலையில் உள்ளது போன்ற கேலிக்கை பதிவுகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. மேலும், பல நிறுவனங்கள் இதை தனது விளமபரத்திற்காக பயன்படுத்தி வருகிறது. நிப்பான் பெய்ன்ட்ஸ் நிறுவனம்,"கிருஷ்ணமூர்த்தி எங்கள் பெயிண்டர்களை போன்று பயிற்சி பெற்றிருந்தால் இந்த மாதிரியான சம்பவம் நேர்ந்திருக்காது. நேசமணி விரைவில் குணமடைய வேண்டுகிறோம்." என்று ஒர் சுத்தியல் புகைப்படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். சோனி மியூசிக் நிறுவனமே, "நேசமணி விரைவில் குணமடைய வேண்டுகிறோம், நேசமணியின் நிலை குறித்து அதிருப்தியில் உள்ள உங்கள் மனதை சாந்தப்படுத்த, எங்களில் பாடல் தொகுப்பு இதோ!" என்று பதிவிட்டுள்ளது. மேலும் சன் நெக்ஸ்ட் நிறுவனம்,"நேசமணி சன் நெக்ஸ்டில் பாதுகாப்பாக உள்ளார், அவரை காண" என்று வடிவேலுவின் வீடியோ அடங்கிய தொகுப்பின் லின்க் ஒன்றை பதிவிட்டுள்ளது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்பஜன் சிங், சேரன் போன்ற பிரபலங்களும் இது பற்றி தங்கள் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளனர். மேலும், இந்த பதிவுகளில் #Pray_For_Nesamani என்ற ஹேஸ்டேக்கையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் நெடிசன்களின் வைரல் ட்விட்டர் பதிவுகள் இதோ!