Solar Eclipse 2019: அகமதாபாத்தில் காணப்பட்ட பகுதி சூரிய கிரகணம்.
NEW DELHI: நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 7.59 அளவில் தெரிய தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு பகுதி சூரிய கிரகணமாகத் தெரிந்தது, முதலில் சவுதி அரேபியாவின் ராயத்தில் தெரிய தொடங்கியது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த பகுதி கிரகணத்தை பார்க்கலாம்.
இந்த பகுதி கிரகணத்தை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் காலை 9.04 மணி அளவில் காணப்பட்டது. அதிகபட்ச கிரகணம் காலை 10.47 மணிக்கு தெரியும் என்றும் முழு கிரகணமானது, பிசிபிக் பெருங்கடலின் குவாம் பிற்பகல் 12.30 அளவில் தெரிய வரும். இந்த முழு சூரிய கிரகணமானது அதிகபட்ச காலம் 3 நிமிடத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
கிரகணம் என்பது நிழல். சூரிய னுக்கும் பூமிக்கும் நடுவே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால் பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப் பட்டு நிலவின் நிழல் பூமியின் மேல் விழுவது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு. சந்திரனின் நிழல் முழுதாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.
நிலவு முழுவதுமாக சூரியனை மறைக்க முடியாமல் அதன் விளிம்பு பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சியளித்தால் அது கங்கண அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம். சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படாமல் ஒளி குறைந்தாலும் வெளிச்சம் இருக்கும். இது பகுதி சூரிய கிரகணம்.
பெரும்பாலான ஆண்டுகளில் இரண்டு சூரிய கிரகணங்களே தெரிகின்றன, அரிதான சந்தர்ப்பங்களில், ஒரு வருடத்தில் ஏழு கிரகணங்கள் வரை இருக்கலாம்.
இன்று காலை சுமார் 7.59 மணியளவில் நிலவு, சூரியனை மறைக்கத் தொடங்கியது. இந்த சமயம் சூரியன் பிறைவடிவில் காட்சியளித்தது. தமிழகத்தின் பல இடங்களில் சூரிய கிரகணம் நடந்து வருகிறது.
அடுத்த மூன்றரை மணி நேரம் நீடிக்கும் இந்த கிரகணம், முற்பகல் 11 மணி 16 நிமிடம் தொடங்கி விலகத் தொடங்கும். பிறை வடிவிலான இந்த சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் தென்படும்.
இந்த சூரிய கிரகண காலத்தில், கேரளாவின் சபரிமலை கோயில், ஆந்திராவின் திருமலை திருப்பதி கோயில் மற்றும் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் போன்ற பல கோயில்கள் மூடப்பட்டு, சுத்திகரிப்பு சடங்குகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படுவது, பாரம்பரியம்.
சூரிய கிரகணத்தின் போது, சூரியன் எதிர்மறையான கதிர்வீச்சுகளை வெளியிடுகிறது என்றும், இந்த கதிர்வீச்சுகள் தெய்வத்தை பாதிக்காதவாறு கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்றும் பல கலாச்சார மற்றும் நம்பிக்கைகள் இருந்து வருகின்றன.
இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும் சூரியக் கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.