This Article is From Jul 17, 2018

‘கவனத்தைத் ஈர்க்கவே சில தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன!’- உயர் நீதிமன்றம் கருத்து

‘சில தற்கொலை முயற்சி நடவடிக்கைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே நடக்கின்றன'- சென்னை உயர் நீதிமன்றம்

‘கவனத்தைத் ஈர்க்கவே சில தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன!’- உயர் நீதிமன்றம் கருத்து
Chennai:

‘சில தற்கொலை முயற்சி நடவடிக்கைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே நடக்கின்றன. என்ன இருந்தாலும், தற்கொலை என்பது சட்டப்படி குற்றம் தான்’ என்று கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 

வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஜி.ராஜ்குமார் என்பவர் பல மாதங்களாக தனக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி அரசு தரப்பிடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார். ஆனால், அவரின் கோரிக்கை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததையடுத்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டார். மேலும், ‘நில அபகரிப்பை நீக்குமாறு’ சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். 

இது குறித்து நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு நான் இது தொடர்பாக புகார் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதால், சட்டப்பேரவைக்கு புகார் கொடுக்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே அனுமதிக்கவே மறுத்தனர். அதனால் தான் நான் விஷம் குடித்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் மனு கொடுத்தேன். அப்போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுதாரரின் வாதத்தைக் கேட்ட பிறகு நீதிமன்றம், ‘தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்திற்காக, யார் மேலாவது வழக்கு தொடரப்பட்டுள்ளதா? ஏனென்றால் சட்டப்படி, தற்கொலைக்கு முயல்வது என்பது குற்றமாகும். ஊடகங்களில் வரும் பெரும்பாலான செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, இதைப் போன்ற தற்கொலை நடவடிக்கைகள் அதிகார மையத்தின் கவனத்தை ஈர்க்கவே செய்யப்படுகின்றன என்பது தெரிகிறது. தற்கொலை முயற்சியினால், அவர்கள் விரும்புவதை சாதித்துக் கொள்ளவும் செய்கின்றனர். இதைப் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு தவறான முன்னுதரணமாக இந்த விஷயம் இருந்துவிடக் கூடாது. மக்கள் அவர்களின் குறைகளைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்’ என்று தெரிவித்தது. 

.