This Article is From Jun 05, 2020

‘இந்த துன்ப சம்பவத்தை வைத்து…’- கேரள கர்ப்பிணி யானை கொலை விவகாரத்தில் கொதித்த பினராயி!

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள், யானைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.

‘இந்த துன்ப சம்பவத்தை வைத்து…’- கேரள கர்ப்பிணி யானை கொலை விவகாரத்தில் கொதித்த பினராயி!

விவாதங்களின் போது, கேரள மாநிலத்தையும் கேரள மக்களையும் குறி வைத்து சிலர் வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஹைலைட்ஸ்

  • கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது
  • யானைக்கு சிலர் பட்டாசு வைத்த அன்னாசிப் பழத்தைக் கொடுத்துள்ளனர்
  • பட்டாசு யானையின் வாயில் வெடித்துள்ளது

கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்தது 15 வயதான யானை. அந்த யானை கருவுற்றிருந்தது. உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அது சென்றது. அங்கு கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர். ஆனால் சில விஷமிகள், அன்னாசிப் பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்துச் சிதறியது. 

இதைத் தொடர்ந்து  கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “பாலக்காடு மாவட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில், கர்ப்பிணி யானை உயிரிழந்துள்ளது. நிறைய பேர் எங்களிடம் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். உங்களின் ஆதங்கம் வீணாகாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். நீதியே வெல்லும்.

அதே நேரத்தில் இந்த துன்ப சம்பவத்தை வைத்து சிலர் வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சரியான தகவல்கள் தெரியாமல் உண்மையை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். சிலர் இதை வைத்துப் சமூகப் பிரிவினையை ஏற்படுத்த முயன்றுள்ளனர். அது மிகத் தவறான செயலாகும்.

நீதி மறுக்கப்பட்டால் அதை எதிர்த்துக் கொதித்தெழும் சமூகம் கேரளம். இந்த மொத்த விவகாரத்தில் இருக்கும் ஒரேயொரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், நீதி மறுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க முடியும் என்பதுதான். மறுக்கப்படும் நீதிக்கு எதிராக போராடும் மக்களாக நாம் இருப்போம். எங்கும், எப்போதும்…” என்று உணர்ச்சிப் பொங்க விளக்கம் அளித்துள்ளார். 

இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன்னர் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள், யானைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். இப்படியான விவாதங்களின் போது, கேரள மாநிலத்தையும் கேரள மக்களையும் குறி வைத்து சிலர் வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் பினராயி, தற்போது சூசகமாக விளக்கம் கொடுத்துள்ளார். 


 

.