மக்களவையில் நேற்று பல தனி நபர் மசோதாக்கள் முன் மொழியப்பட்டன
New Delhi: மக்களவையில் நேற்று பல தனி நபர் மசோதாக்கள் முன் மொழியப்பட்டன. அதில், ஊழியர்கள் பணியை முடித்து வீட்டுக்குச் சென்ற பின்னர் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து கொள்வதற்கான மசோதா, பசுத் தொகை கட்டுப்பாடு மசோதா, அரசு விழாக்களில் சைவ சாப்பாடு மட்டும் பரிமாறப்பட வேண்டும் என்பதற்கான மசோதா உள்ளிட்டவை முன் மொழியப்பட்டன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி சுப்ரியா சுலே, ஊழியர்கள் பணி முடிந்து சென்ற பின்னர் நிறுவனத்திலிருந்து வரும் அழைப்புகளுக்கோ, மின்னஞ்சல்களுக்கோ பின்னூட்டம் அளிக்கத் தேவையில்லை என்பதை உறுதி செய்யும் வகையிலான மசோதாவை கொண்டு வந்தார்.
அதேபோல பாஜக-வின் பிரவேஷ் சாயிப் சிங், அரசு நடத்தும் பொது நிகழ்ச்சிகளில் சைவ சாப்பாடு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய மசோதா கொண்டு வந்தார்.
பாஜக-வைச் சேர்ந்த இன்னொரு எம்.பி-யான நிஷிகாந்த் துபே, மாடுகளின் தொகையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டி ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்று கோரி ஒரு மசோதாவை அறிமுகம் செய்தார்.
மேலும் பாஜக எம்.பி ஜக்தாம்பிகா பால், ஓர் பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்களும் ராணுவம் உட்பட அனைத்துப் பாதுகாப்புத் துறைகளிலும் பணியாற்றிட வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரி ஒரு மசோதாவை முன் மொழிந்தார்.
சிவசேனா எம்.பி சிவாஜி பாடில், பிச்சை எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று கோரி மசோதா கொண்டு வந்ததும் கவனம் பெற்றது.