படுக்கை வசதியில்லை: குடும்பத்துடன் முதல்வர் எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்ட கொரோனா நோயாளி!. (FILE)
Bengaluru: கர்நாடகாவில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் படுக்கை வசதியில்லை எனக்கூறி தனது குடும்பத்துடன் முதல்வர் எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில் கொரோனா பாதித்த அந்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் முதல்வர் எடியூரப்பா வீட்டிற்கு எதிராக நின்றபடி, கூச்சலிடுகிறார். எனக்கு முடியவில்லை. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மகனுக்கும் தற்போது காய்ச்சல் உள்ளது. எனக்கு எங்கும் படுக்கை கிடைக்கவில்லை என்கிறார்.
இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளர், அந்த நபர் எந்த மருத்துவமனைக்கு செல்லாமல் நேரடியாக முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அவரிடம் பணம் இல்லை, அதனால் தான் அவர் இங்கு வந்ததாக கூறினார்.
தொடர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் படுக்கை வசதிகள் கிடைப்பது சிரமமானதாக உள்ளது.
இதனிடையே, பாதிப்பு அதிகமுள்ள பெங்களூர் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில், செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, படுக்கை வசதிகள் கிடைப்பது சிரரமாக உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் உள்ளது என்பது குறித்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும் என்று கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.