This Article is From May 16, 2019

டெல்லியில் காங்., கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு சோனியா அழைப்பு!

டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement
இந்தியா Written by

2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும்நிலையில், இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வருகிற 19ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்த, வாக்கு எண்ணிக்கை வரும் மே.23ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார். அதற்கான, முதல் கட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் அனைவருக்கும் சோனியா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், டெல்லியில் வரும் 23.ஆம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், எதிர்கால அரசியல் பற்றி அதில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து, டெல்லியில் 23.ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதேபோல், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 3ஆம் அணி அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர ராவ் சென்னையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டாட்சி அமைக்க ஸ்டாலினிடம் சந்திர சேகர ராவ் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் தரப்பில் சந்திர சேகர ராவ் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு சந்திரசேகர ராவ், செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துச் சென்றுவிட்டார். எனினும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகுமா என்பது மே 23-ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement