This Article is From May 22, 2020

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை! பிரதமர் மோடி மீது கடும் விமர்சனம்

அரசியல் விவகாரம் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை! பிரதமர் மோடி மீது கடும் விமர்சனம்

மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் சோனியா காந்தி.

New Delhi:

கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் பொது முடக்கம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வீடியோ கான்பரன்சிங் மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

பிரதமர் மோடியின் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான அறிவிப்பு நகைப்புக்குரிய செயலே அன்றி வேறேதுமில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். 

ஆலோசனை கூட்டத்தின்போது சோனியா காந்தி பேசியதாவது-

இப்போது அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திற்கு மட்டும்தான் இருக்கின்றது. பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டும் என பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

ஆனால் ரூ. 20 லட்சம் கோடிக்கு மோடி திட்டத்தை அறிவிக்கிறார். அதனை 5 நாட்களாக நிதியமைச்சர் விளக்குகிறார். இது நாட்டை நகைப்புக்கு உரியதாக்கும் செயலாகும். 

21 நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் கொரோனா வைரஸ் இந்தியாவில்தான் இருக்கும் என்பதுபோல்தான் நிலைமை உள்ளது. அரசுக்கு பொது முடக்கம் பற்றியோ, அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவோ நல்ல திட்டம் ஏதும் இல்லை. 

வெளி மாநில தொழிலாளர்கள் மத்திய அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அடித்தட்டு மக்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் என சுமார் 13 கோடி குடும்பத்தினர் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் துயரத்தை நீக்குவதற்கான தீர்வு அரசிடம் இல்லை. 

இவ்வாறு சோனியா பேசினார். இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல் விவகாரம் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 

35 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து தற்போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா முதன்முறையாக சோனியா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.  

.