This Article is From Jan 11, 2020

'குடியுரிமை சட்ட திருத்தம் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும்' : சோனியா காந்தி!!

NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதனால் தீங்கு ஏதும் ஏற்படாது என்று மத்திய அரசு கூறுவதை ஒருபோதும் ஏற்க வேண்டாம் என்று கூறினார்.

'குடியுரிமை சட்ட திருத்தம் மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும்' : சோனியா காந்தி!!

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.

New Delhi:

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது பாகுபாடு காட்டும் சட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். 

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. 

இதன் பின்னர் அவர் கூறியதாவது-

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகுபாடு காட்டக்கூடிய, பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய சட்டம். இந்த சட்டத்தின் மோசமான உள்நோக்கத்தை ஒவ்வொரு தேச பக்தர்களும், மத சார்பற்றவர்களும், சகிப்புத்தன்மை உடையவர்களும் நன்றாக உணர்ந்துள்ளனர். மதத்தின் அடிப்படையில் இந்தியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இந்த சட்டம் வகை செய்யும். 

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள், இந்த சட்டத்தின் தீங்கை உணர்ந்திருக்கிறார்கள். இது நிறைவேற்றப்பட்டால் எத்தகையை விளைவு ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது. 

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களால் உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்கள் போலீசால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தின் ஜாமியா மில்லியா, டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், அலகாபாத் பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக் கழகம், குஜராத் பல்கலைக் கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட்டவற்றில் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் படை எவ்வாறு பிரயோகப்படுத்தப்பட்டது என்பதை பார்த்துள்ளோம். 

போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். 

தேசிய மக்கள்தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆர். எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை நம்ப வேண்டாம்.

NPR 2020 -ல் உள்ள விதிகள் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் போன்றுதான் உள்ளன. 

ஜம்ம காஷ்மீர் மக்களுக்கு இன்னமும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்னையை முக்கியமாக கருத வேண்டும். அங்கு இயல்பு நிலை திரும்பி விட்டதாக மத்திய அரசு கேலிக்கூத்தான தகவல்களை கூறுகிறது. அத்துடன், வெளிநாட்டு பிரதிநிதிகளை மத்திய அரசு அங்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறது.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார். 

.