Read in English
This Article is From Aug 10, 2018

ரபேல் போர்விமான ஒப்பந்த விவகாரம்: சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

ரபேல் ஒப்பந்தம் குறித்து அவையில் பேச அனிமதிக்காத காரணத்தனால், வெங்கையா நாயுடுவின் சிற்றுண்டி அழைப்பை காங்கிரஸ் நிராகரித்தது

Advertisement
இந்தியா
New Delhi:

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடந்தது. இதற்கு சோனியா காந்தி தலைமை வகித்தார்.

ராஜ பப்பர், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, சிபிஐ-இன் டி. ராஜா, ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். 'நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும்', 'மோடியின் ஊழல் வெளிப்பட்டுவிட்டது', 'அம்பலமாகிய ரபேல் ஊழல்' போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை உயர்த்திப் பிடித்தபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய காங்கிரசின் குலாம் நபி ஆசாத், 'இது உலகின் மிகப்பெரிய ஊழலாகும். இதில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை விசாரணை வேண்டும்' என்றார். மேலும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் காலைச் சிற்றுண்டிக்கான அழைப்பையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவையில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்துப் பேச அனுமதிக்காததே அவர்கள் நாயுடுவின் அழைப்பை நிராகரிக்க காரணமாகும். மேலும் இதுகுறித்து அவர்கள் பேச முயன்றபோது அவர்களது மைக் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன என்பதும் உறுப்பினர்களின் போராட்டத்துக்கு இடையே அவசர அவசரமாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ரபேல் ஊழலைக் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிட முடியாதவாறு ஊடகங்கள் தடுக்கப்படுகின்றன" என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார். மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷனும், 'இது குறித்த தகவல்கள் வெளியானால் அரசாங்கத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இவ்விவகாரத்தில் அரசு இரகசியம் காக்கிறது' என்று கூறினார்.

Advertisement

'இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இருக்கும் இரகசிய ஒப்பந்தப்படி ரபேல் குறித்த தகவல்களை வெளியிட இயலாது என்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது பொய்' என்று கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று அப்போதே நிர்மலா சீதாராமன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனின் இரண்டு பேட்டிகளை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி கூறியதை மறுத்தார்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும், 'ரபேல் ஒப்பந்தம் குறித்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டிகளில் துளியளவும் உண்மை இல்லை. மீண்டும் மீண்டும் இதில் எந்த அடிப்படையும் இல்லாமல் பொய்ப்புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது' என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisement
Advertisement