ஜாமீன் மனு தொடர்பாக இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
New Delhi: டெல்லி திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாரை சோனியா காந்தி இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சோனியாவுடன் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் மற்றும் சக தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருதந்தனர்.
இந்நிலையில், சிறையில் சிவக்குமாரை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் கூறும்போது, கட்சி அவருடன் இருக்கிறது என்றும் அவருக்காக தொடர்ந்து போராடும் என சோனியா சிவக்குமாருக்கு உறுதி அளித்துள்ளார்.
‘அரசியல் பழிவாங்குதலுக்காக' சிவக்குமார் மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், இதேபோல், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் பாஜக அரசால் கூறிவைக்கப்படுகின்றனர் என்றும் சோனியா கூறினார். அவர்களுக்கு எதிராக நாம் போராடி இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என சோனியா தெரிவித்ததாக சுரேஷ் கூறியுள்ளார்.
அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் ஆஜரானார்.
அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த செப்டம்பர் 3ந்தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
With inputs from Press Trust of India