This Article is From Feb 27, 2020

டெல்லி வன்முறை : குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய, மாநில அரசுகள் மீது காங்கிரஸ் புகார்!!

டெல்லி வன்முறை : டெல்லியில் கடந்த ஞாயிறன்று மாலை முதல் வன்முறை நடந்து வருகிறது. இதற்குப் பொறுப்பு ஏற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குடியரசு தலைவரை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் குடியரசு தலைவரை சந்தித்தனர்
  • ராஜ தர்மத்தை காப்பாற்றுமாறு மன்மோகன் குடியரசு தலைவரிடம் கோரிக்கை
  • அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
New Delhi:

டெல்லி வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டி சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

34 பேர் உயிரிழந்துள்ள டெல்லி வன்முறையில் மத்திய மாநில அரசுகள் மவுனப் பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 'குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜ தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என்றார்.  டெல்லி வன்முறையில் 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். 

சோனியா காந்தி அளித்த பேட்டியில்,'மத்திய அரசும், புதிதாக ஆட்சிக்கு வந்த டெல்லி ஆம் ஆத்மி அரசும், நடந்த கலவரத்தை வாய்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தனர்' என்று குற்றம் சாட்டினார். 

நடந்த வன்முறைக்குப் பொறுப்பு ஏற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த ஞாயிறன்று தொடங்கிய குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த மோதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கலவரம் இன்றளவிலும் நடந்து வருகிறது.

திருட்டு, தீயிட்டுக் கொளுத்துதல், கல்வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. 

காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது - 

அரசியலமைப்பு சட்டத்தின்படி ராஜ தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு உங்களுக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது. நீங்கள் உத்தரவிட்டால் அதனை அரசு இணங்கித்தான் செல்ல வேண்டும். 

டெல்லியில் குடிமக்களுடைய வாழ்வு, சுதந்திரம், சொத்துக்களைப் பாதுகாக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய உள்துறை அமைச்சரைப் பொறுப்பு நீக்கம் செய்ய வேண்டும் என்று மீண்டும் உங்களை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.