This Article is From Nov 05, 2019

ஆட்சி அமைக்கிறதா சிவசேனா? ஆதரவு அளிக்கிறதா காங்கிரஸ்? என்ன சொல்கிறார் சோனியா காந்தி..

ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுடன் தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது.

கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியன் தலைவர் சரத்பவாருடன் சோனியா நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

New Delhi/ Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு எந்தவொரு ஆதரவையும் அளிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக என்டிடிவிக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன. 

முன்னதாக நேற்றைய தினம் காங்கிரஸ் கட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த சாதகமான முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வருகிறது. 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தார். அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்று கூறினார். 

 இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். 

இதேபோல், சரத்பவார் கூறும்போதும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். எங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை. மக்கள் எங்களை எதிர்கட்சிகள் வரிசையில் அமரும் படியே கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால், எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் நாங்கள் கவனமுடன் செயல்படுவோம் என்று கூறியிருந்தார். 

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. 

.