நேற்று சென்னையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது
Chennai: ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகஞ-வை வீழ்த்த, திமுகவுடன் நெருக்கமான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்' என்று நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியுள்ளார்.
நேற்று சென்னையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட பல தேசிய அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சோனியா காந்திதான், கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். சிலைத் திறப்பு விழாவின் போது பேசிய சோனியா, ‘கருணாநிதி உயிரோடு இருந்தபோது, காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. அதைப் போன்ற உறவு தற்போதும் தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நமது ஜனநாயக அமைப்புகளையும், நமது தேசத்தையும் அழிக்க நினைக்கும் சக்தியை வீழ்த்த நமது கூட்டணி மிகவும் முக்கியமானது.
தமிழக மக்களுக்கு நாம் இருவரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதை முன்னெடுத்துச் சொல்வோம். நாம் இருவரும் ஒன்றாக இருந்து இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம். கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா என்றொரு நாட்டை காத்து வந்த ஜனநாகயத்தைக் காப்பாற்றிடுவோம்' என்று பேசினார்.
கருணாநிதி குறித்து சோனியா பேசுகையில், ‘2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு, கருணாநிதியின் அறிவும், அரசியல் அனுபவுமும் அதிகமாக உதவியது. எனக்குத் தனிப்பட்ட முறையில் அவரின் பங்களிப்புப் பெரிதாக தெரிந்தது' என்றார்.