Maharashtra floor test: நிச்சயம் நம்பிக்க வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
New Delhi: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரவேற்றுள்ளார். மேலும், நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நாளை மாலை 5 மணிக்குள் எம்எல்ஏக்கள் பதியேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முடிவில் இருந்தனர். பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் தேவையென்ற நிலையில் தங்கள் வசம் 162 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.