Sonia Gandhi has expressed her anguish at the death of head constable Ratan Lal (File)
New Delhi: வடகிழக்கு டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள்ளான மற்றொரு கலவரத்தில் ஒரு தலைமைக் காவலர் உட்பட ஐந்து பேர் இறந்திருக்கின்றனர்.
மத ஒற்றுமையை நிலைநாட்டவும் மதத்தின் அடிப்படையில் தேசத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் ஆர்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். மேலும், கடைகள் மற்றும் வாகனங்களையும் அவர்கள் எரித்தனர். இதன் காரணமாகத் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் சோனியா காந்தி, கலவரத்தில் இறந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது மரணம் வேதனையளிப்பதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தியின் தேசத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று திருமதி சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தத்திற்கு நாட்டில் இடமில்லை என்று காந்தி கூறியிருந்ததையும் சோனியா சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வன்முறையைத் தொந்தரவு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
"டெல்லியில் இன்று வன்முறை கவலைக்குரியது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் ஆனால் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. டெல்லி குடிமக்கள் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களைப் பொருட்படுத்தாமல் கட்டுப்பாடு இரக்கம் மற்றும் புரிதல் ஆகியவற்றைக் காட்ட நான் கேட்டுக்கொள்கிறேன். "என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கிட்டதட்ட இதே கருத்தினை தெரிவித்திருக்கிறார். மக்கள் நல்லிணக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
டெல்லியின் வன்முறை கவலையளிப்பதாகவும், சாமானிய மக்கள் மட்டுமே வன்முறையை எதிர்கொள்வதாகவும், இதனைத் தடுப்பது எங்கள் பொறுப்பு என்றும் அவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தேசப்பிதாவின் நாடானது அமைதியான நாடு என்றும், அதனை நீட்டிக்கச் செய்ய மக்களிடம் தன் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஒற்றுமைக்கும் அமைதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்றைய மாலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பஹல்லா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட பகுதியில் தொடர் வன்முறை பதிவாகியிருப்பதாகத் தரவுகள் தெரியப்படுத்துகின்றன. இதைத் தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.