திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.
கலைஞர் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கலைஞர் சிலையும் அருகருகே அமைய உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை திறந்து வைக்க அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். இதுபற்றி அவர் சார்பில் வெளியான கடிதத்தில், கடந்த நவம்பர் 11ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திருவுருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு சோனியா காந்தி அவர்கள் சம்மதம் தெரிவித்து ஒப்புதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.