சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், கலைஞர் நினைவிடத்திலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை திறந்து வைக்க அகில இந்திய தலைவர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, இந்த சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சரியாக மாலை 5.15 மணி அளவில் கலைஞரின் திருவுருவச்சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற சோனியா காந்தி, ராகுல் காந்தி அங்கு அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவரும் சென்றனர்.