This Article is From Nov 29, 2019

மகாராஷ்டிரா : பதவியேற்பு விழாவுக்கு நேரில் வராமல் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த சோனியா!!

காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள் உதவியுடன் மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். இதற்காக சோனியாவுக்கு நன்றி தெரிவித்த உத்தவ், பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

மகாராஷ்டிரா : பதவியேற்பு விழாவுக்கு நேரில் வராமல் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த சோனியா!!

சோனியாவுக்கு உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா பூங்கொத்து அளிக்கும் காட்சி.

Mumbai:

மகாராஷ்டிர முதல்வரான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதில் பங்கேற்கவில்லை. கடிதம் வாயிலாக உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது-

பாஜக ஆட்சியில் இந்தியா மிக மோசமான சூழ்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலில் உள்ளது. பாஜகவுக்கு எதிராக கட்சிகள் ஒருங்கிணைந்து வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இந்த ஒற்றுமை மகாராஷ்டிராவில் நிலையான, மதச்சார்பற்ற, ஏழைகளின் வாழ்வை முன்னேற்றும் அரசாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரசியல் என்பது நஞ்சூட்டப்பட்ட நிலையிலும், பொருளாதாரம் சீர்குலைந்த நிலையிலும் உள்ளன. விவசாயிகள் பெரும் சிக்கலில் சிக்கத் தவிக்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஏற்படுத்தியிருக்கும் குறைந்தபட்ச அடிப்படை செயல் திட்டம் மாநிலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதில் குறிப்பிட்டள்ளவற்றை நிறைவேற்ற கட்சிகள் பாடுபடும் என நம்புகிறேன். 

இந்த புதிய கூட்டணி மகாராஷ்டிராவில் பொறுப்புடன், பலன் அளிக்கும் விதத்தில், மாநிலத்தை முன்னேறச் செய்யும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் என்று மக்கள் நம்புகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளை நமது கூட்டணி அரசு நிறைவேற்றும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. 

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா என்னை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். மிக்க மகிழ்ச்சி. தனது வாழ்வில் புதிய தொடக்கத்தை கண்டிருக்கும் உத்தவ் தாக்கரே வெற்றிகளை குவிக் வாழ்த்துகிறேன். 

இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை டெல்லிக்கு விரைந்த உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சந்தித்து தனது தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

.